சிறப்பு செய்திகள்

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்

சென்னை

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது :-

அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (6,75,518 நபர்கள்) 94.57 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான, இறப்புகள் அதாவது 1.53 சதவீதம் உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிக்கப்படுகின்றனவா? என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவிட் சிறப்பு மையங்களில் உணவு, குடிநீர், கழிப்பிட மற்றும் பிற வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை, 46 லட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக் கவசங்களை சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

பிற மாவட்டங்களில், இதுவரை 4.95 கோடி முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலையை பாதுகாக்க தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகள்.

கொரோனா காலத்தில் கூட, இதுவரை 55 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 40,718 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 74,212 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன. இந்நடவடிக்கைகளால், நடப்பாண்டில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

அம்மாவின் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்துள்ளது. மக்களை பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாத்து, வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது, தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.