தற்போதைய செய்திகள்

கோவை மாநகரில் பல இடங்களில் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை

தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றாத திமுகவை கண்டித்தும், வெற்றுஅறிக்கை விடுத்து, வாரிசு அடிப்படையில் தலைமைக்கு பதவிக்கு வந்த ஸ்டாலினை கண்டித்தும், ஆதாரமின்றி அவதூறு பிரசாரம் செய்த நடிகர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்பு கோவையில் திமுக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கழக அரசு மீதும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை மாவட்டத்தில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வரும் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மேலும் கழக அரசை குறை கூறும் வகையில் பல்வேறு சர்ச்சை பேச்சுக்களையும் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதி கழகம் சார்பிலும் அவதூறு பரப்பும் வகையில் பேசிய திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் கண்டித்து கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கோவை கணபதி பகுதியிலும், துடியலூர் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமையிலும், கோவை குறிச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர் தலைமையில் கோவை வடவள்ளி பேருந்து நிலையத்திலும், கோவை சிங்காநல்லூர் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமசந்திரன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர், துடியலூர், வடவள்ளி, குனியமுத்தூர், இடையர்பாளையம், பிகே.புதூர், நரசிம்மபுரம், கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், குறிச்சி, போத்தனூர், உக்கடம் லாரி பேட்டை, கரும்புக்கடை, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அத்திக்கடவு அவினாசி திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மேற்குப்புற வழிச்சாலை திட்டம், நொய்யல் ஆறு சீரமைப்பு திட்டம், ராணுவ தளவாட பாதுகாப்பு பூங்கா, எங்கு திரும்பினாலும் பாலங்கள், 5 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், நிர்வாக வசதிக்காக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்கள், அனைத்து சாலைகளும் விரிவாக்கம், கூட்டு குடிநீர் திட்டங்கள், குறிச்சி, குனியமுத்தூர் ஆழியார் குடிநீர் மேம்பாட்டு திட்டம் என பல்வேறு எண்ணற்ற திட்டங்களை வழங்கிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுகவினர் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும் கடந்த ஆட்சிக் காலங்களில் கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டங்களையும் வழங்காமல் தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே செய்த திமுகவும், வாரிசு அடிப்படையில் தலைமை பதவியை பிடித்துவிட்டு வெற்று அறிக்கை மூலம் அரசியல் நடத்தி கழக அரசு மீது அவதூறு பரப்பும் முகஸ்டாலினை கண்டித்தும், கழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் வாய்க்கு வந்தையெல்லாம் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் நடத்திய குள்ளநரி திமுகவை கண்டிக்கிறோம். பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் உளறல் நிதியை கண்டிக்கிறோம். ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிர்மூச்சாக திகழும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கரங்களை வலுப்படுத்துவோம் எனவும் கோஷமிட்டனர்.
மேலும் எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டு காலம் ஆனாலும் தமிழகத்தை கழகம் தான் ஆளும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சத்திய வாக்கை காப்பாற்றுவோம் என கழக தொண்டர்கள் கோஷமிட்டனர்.