கோவை

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இப்பேருந்தை தங்கவேல் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்து சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பு என்னும் பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த மேட்டுப்பாளையம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 56), கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 68), வெள்ளிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 65), பாலப்பட்டி பகுதியை சேர்ந்த யாசிகா (வயது 21), பேருந்து நடத்துனர் கோபால் ராஜ் (வயது 46), லாரி டிரைவர் முனியசாமி (வயது 30) விஜயகுமாரி உள்பட 8 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி சசிரேகா, உதவி ஆய்வாளர்கள் ராஜ் பிரபு, லெனின் அப்பாதுரை, ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சிறுமுகை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.