சிறப்பு செய்திகள்

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறுங்கள் – துணை முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறவேண்டும் என்று துணை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சிக்கன நாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சேமிப்பையும், சிக்கனத்தையும் வலியுறுத்தி 30-10-2020 அன்று உலக சிக்கன நாள் விழா கொண்டாடுவதை அறிந்து என் மனமார்ந்த மகழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985 முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து சிக்கன நடவடிக்கையைக் கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.

என மனித வாழ்க்கையில், பொருளின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.மக்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும். தங்களின் எதிர்காலத் தேவைகளில் முக்கியமாக கருதப்படும், பிள்ளைகளின் படிப்பு, திருமணம் மற்றும் வீடுகட்டுதல் போன்ற அத்தியாவசியச் செலவினங்களை கடன் பெறாமல், தங்கள் சேமிப்பிலிருந்தே கௌரவமாக மேற்கொள்ள இயலும்.

எனவே தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் இன்றே முதலீடு செய்து பயன் பல பெற்றிட, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.