கன்னியாகுமரி

குடும்ப பெண்களை ஏமாற்றி பல லட்சம் சுருட்டிய அ.ம.மு.க. பெண் நிர்வாகி – குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப பெண்களிடம் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமமுக கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி மீது பெண்கள் பலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மேரி ரமணி. அமமுக.வில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது பக்கத்து ஊரான முக்காட்டை சேர்ந்த ரீட்டா என்பவர் முலம் பைங்குளத்தை சார்ந்த கோமதி என்பவருக்கு அறிமுகமாகி அ.ம.மு.க ஏற்பாட்டில் தனிநபர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் வரை லோன் வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை குடும்ப பெண்களை குறி வைத்து அவர்களது ஏழ்மையை முதலீடாக்கி மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் லோன் வழங்க ரூ.2.50 லட்சம் (இரண்டரை லட்சம்) பங்கு தொகை செலுத்த வேண்டும் என்றும் லோன் தொகை வரும் போது தற்போது செலுத்தும் இந்த தொகையையும் திரும்பி தங்களுக்கே தந்த விடுவோம் என்றும், அதற்கு ஆவணமாக ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான் கார்டு ஆகியவற்றை மேரி ரமணி பெற்றுக் கொண்டுள்ளார்.

இவரது ஆசை வார்த்தைகளில் மயங்கி ஏராளமானோர் பணத்தை கொடுத்துள்ளனர். லோன் பணத்தை ஒவ்வொருவரும் பெற முதலில் தலா 3000 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி வாங்கியுள்ளார். பணம் செலுத்திய 3-வது நாள் உங்களுக்கு 1 லட்சம் லோன் கிடைக்கும் என்று சொல்வாராம்.

அதன் பிறகு பணம் கொடுத்த நபர்களிடம் சென்று உங்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வரப்பட்ட பணம் விஜிலென்ஸ் போலீசார் மற்றும் காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக சிறிது பணம் கொடுத்தால் பிடித்து வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள். அது கிடைத்த உடன் உங்களுக்கு சேர வேண்டிய பணத்துடன் இந்த பணத்தையும் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறி பல லட்சம் ரூபாயை வாங்கி சென்று விடுவாராம்.

மேலும் அந்த பணத்தை மீட்க முடியாவிட்டால் நான் இங்கேயே இறந்து விடுவேன் என கத்தியை தன்னுடைய கழுத்தில் வைத்து மிரட்டுவாராம். அதற்கு பயந்து ஒருசிலர் நகைகளை விற்றும், பிறரிடமிருந்து கடன் வாங்கியும் பணத்தை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டால் தரலாம் தரலாம் காலம் கடத்தி வந்துள்ளார்.

ஒருசிலர் பணத்தை கொடுக்கா விட்டால் காவல் நிலையங்களில் புகார் கொடுப்போம் என்று கூறினால் அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அவரின் மிரட்டலுக்கு ஆளாகாதவர்களுக்கு போலியான செக்குகளை கொடுத்து ஏமாற்றுவதையும் மேரி ரமணி வாடிக்கையாக கொண்டுள்ளார். இதில் விஷேசம் என்னவென்றால் இவர் ஏமாற்றியதில் அதிகமானோர் அவர் சார்ந்திருக்கும் அ.ம.மு.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தினரே ஆகும்.

முதலில் ஒரு பெண்ணிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அவர் மூலமாக மற்ற பெண்களை ஏமாற்றுவது மேரி ரமணி வாடிக்கையாக இருந்துள்ளது. கடந்த 3 வருடங்களாக பலரிடம் இது போன்று ஏமாற்றி பணமோசடி செய்த விவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவர அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அ.ம.மு.க. பெண் நிர்வாகியை கைது செய்யக்கோரியும், பறிகொடுத்த பணத்தை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அ.ம.மு.க பெண் நிர்வாகி பொதுமக்களிடம் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.