தற்போதைய செய்திகள்

மேல்நகரில் ரூ.10 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை

ஆரணியை அடுத்த மேல்நகர் பகுதியில் ரூ.10 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல்நகர் பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கினங்க தொடர்ந்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். புதிய உறுப்பினர்கள் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர். ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் இதுவரை நன்றி சொல்ல கூட தொகுதி பக்கமே வரவில்லை.

கொரோனா நேரத்தில் கூட ஆறுதல் சொல்ல வராத நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து விட்டீர்கள். அவரால் என்ன பயன். உங்கள் ஊருக்கு எதாவது வளர்ச்சி பணிகள் செய்தது உண்டா? ஆனால் கழக அரசு மேல்நகர் கிராமத்தை பொறுத்தவரை ஏரி, குளங்கள் நிரம்புவதற்காக ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. புதிய சாலைகள், பக்க கால்வாய், மேநீர்தேக்கதொட்டி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலமாக 2 ஏரி, 2 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மேல்நகர் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

மேற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ப.திருமால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் எ.அசோக்குமார், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், தகவல் தொழில்நுட்பபிரிவு சரவணன், வினோத், புங்கம்பாடி சுரேஷ், மேல்நகர் தலைவர் ரத்னாஅன்பழகன், எம்.சி.ரவி, முன்னாள் தலைவர் சிவக்குமார், பிச்சாண்டி, சிவா, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்

ஆரணியை அடுத்த மேல்நகர் கிராமத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் 300 பேர் இணைந்தனர். உடன் மேற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ப.திருமால் மற்றும் பலர் உள்ளனர்.