இந்தியா மற்றவை

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி கோவின் இணையதளத்தில் 1-ந்தேதி முன்பதிவு துவக்கம்

புதுடெல்லி, டிச.28-

நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் 1-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளத்தில் சென்று, 15 முதல் 18 வயது வரையுள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பதிவு செய்ய, ஆதார் அட்டை இல்லாதவர்கள், 10-ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு ஏற்பாடாக, கோவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டியலில் 10-ம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இணையதளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 3-ந்தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் செய்யப்பட்டு வருகிறது.