திருவள்ளூர்

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தடுப்பு சுவர் கட்ட ஒப்புதல் – கருத்துக்கேட்பு கூட்டத்தில் தகவல்

திருவள்ளூர்

பழவேற்காடு ஏரியின் முகத்துவார பகுதியில் தடுப்பு சுவர்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக, பழவேற்காடு பகுதியில், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை நிரந்தர நிலைப்படுத்தும் பணிகள் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையிலும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் பேசுகையில், பழவேற்காடு மற்றும் அருகிலுள்ள கிராமத்தின் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காக, மீன்வளத்துறை மற்றும் தமிழக அரசால் பழவேற்காடு ஏரியின் முகத்துவார பகுதியின் நிரந்தர நிலைத்தன்மைக்கு தடுப்பு சுவர்களைக் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பழவேற்காடு பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் மற்றும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பழவேற்காடு கிராம மக்கள் தங்களது சாதகமான கருத்துக்களை பதிவு செய்து, அரசுக்கு நன்றி கூறினர்.