தற்போதைய செய்திகள்

கிராமப்புற பெண்கள் 1500 பேருக்கு இலவச நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் கோலார்பட்டி, நல்லாம்பள்ளி, சின்னாம்பாளையம் மாக்கினாம்பட்டி மற்றும் சூளேஸ்வரன்பட்டி ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சி பகுதியை சேர்ந்த 1500 கிராமப்புற பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம் ரூ.30,37,500 மதிப்பிலான விலையில்லா நாட்டுக்கோழிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- 

கால்நடை பராமரிப்புத்துறைக்கென பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவித்து அதிகப்படியான நிதியினை ஒதுக்கி தந்துள்ளார். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வு மேம்பாட்டிற்காகவும் மற்றும் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கால்நடை பராமரிப்பத்துறையின் சார்பில் கிராமப்புற பெண்களுக்கு தலா 25 எண்ணிக்கையிலான விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராம ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வந்த இத்திட்டம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களை புதிய தொழில் முனைவோராக உருவாக்கிடவும் தனிநபர் வருமானத்தை பெருக்கிடவும் மற்றும் கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு பெண்களின் வருவாய் பெருக்கத்திற்காகவும் இத்தகைய திட்டங்கள் அம்மா அவர்களின் அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மனிதர்களுக்கு உள்ளதைப் போல கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சைக்காக 1962 என்ற இலவச எண் கொண்ட அம்மா ஆம்புலன்சு சேவையும் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி, தெற்கு-2 ஒன்றிய கழக செயலாளர் மு.இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தகுமார், மாரியம்மாள் அழகிரிராஜ், பாலசந்திரன், பேரூராட்சி கழக செயலாளர்கள் நரிமுருகன், சுந்தர்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மகாராஜா மதியழகன், பி.ஆர்.பாண்டியன், வார்டு செயலாளர் கார்பேண் பாலு, காலனி செல்வராஜ், பாசறை செயலாளர் மஜீத், மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, துணை இயக்குநர் ராகவன், உதவி இயக்குநர்கள் ஓம் முருகன், திருகுமரன், மருத்துவர் முருகன், கால்நடைத் உதவி மருத்துவர்கள் கருப்பையா, முருகானந்தம், சதீஸ், மதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.