தற்போதைய செய்திகள்

மின்கட்டணம் உயர வாய்ப்பே இல்லை – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதிபட தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும். பள்ளிபாளையத்தில் வீட்டில் திடீரென பட்டாசு வெடித்து விபத்தில் இருவர் உயிரிழந்ததால், அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பில்லை. உயர்த்தப்பட மாட்டாது என ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

பொள்ளாச்சியில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்ட பிறகே கோபுரம் அமைக்கப்படும். உடனடியாக நிவாரணம் வழங்க அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிய பிறகே, விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது, மழை நின்றவுடன் மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டால் பழுது நிக்கி மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்தடை இல்லை.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.