தற்போதைய செய்திகள்

ஆவின் விற்பனை நிலையம் தொடங்க படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை : அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி

திருவண்ணாமலை

ஆவின் விற்பனை நிலையம் தொடங்க படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட ராஜன்தாங்கல் தளவாய் குளம் பகுதியில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் இயக்குனர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். மேலும் ஆவின் பொருட்கள் விற்பனையையும் அவர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்பை விட தற்பொழுது அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கிராமப்புற பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அலுவலகத்தை அணுகலாம். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் ஆவினில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் அதிக இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட ஆவின்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.