தமிழகம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.60 லட்சத்தில் நவீன தீவிர சிகிச்சை மையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனத்தால் சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சிமூலமாக திறந்து வைத்தார்.

ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனம், கூட்டாண்மை சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை, கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நன்கொடையாக நிறுவியுள்ளது.

இந்த மையத்தில் 10 படுக்கைகளும், ஒரு செவிலியர் பணிப் பகுதியும் உள்ளது. இந்த மையத்தில் அவசரசிகிச்சை அளிக்கத் தேவையான பிராணவாயு இணைப்புகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் உள்ளன. மருத்துவமனைக்குள் கோவிட்-19 சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசர பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம்.

நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மைய கண்காணிப்பு வசதியும், புகைப்படக் கருவிகளும் உள்ளன. இத்தகைய வசதிகள் கொண்ட இந்த மையம் இந்தியாவிலேயே முதல் மையம் ஆகும். இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர்

க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மருத்துக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் ப. வசந்தாமணி, ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் சிராக் கப்பாடியா மற்றும் ஏ.ஆர். நாராயணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.