சிறப்பு செய்திகள்

அரசு எதை கொண்டு வந்தாலும் நடைமுறைப்படுத்தியே தீரும் – முதலமைச்சர் உறுதி

ராமநாதபுரம்

அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றியே தீரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குரு பூஜையும் இன்று (நேற்று) நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908-ம் ஆண்டு தேவர் திருமகனார் பிறந்தார். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து இளைஞர்களை திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகச் செம்மல். 1920-ம் ஆண்டில் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்த குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் திருமகனார் மேற்கொண்ட போராட்டம் மிக மிக முக்கியமான போராட்டமாக அன்றையதினம் விளங்கியது.

1937-ம் ஆண்டு மாநிலத் தேர்தலில், தேவர் திருமகனார் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு ஆங்கிலேய அரசால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பலம் வாய்ந்த ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றவர். அதைத் தொடர்ந்து 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலிலும் தேவர் திருமகனார் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின்னர் 1948-ம் ஆண்டு தேவர் திருமகனார் பார்வர்டு பிளாக் கட்சியினுடைய தமிழ்நாட்டின் தலைவரானார். 1937 முதல் 1962 வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். மேலும் 1952, 1957 மற்றும்

1962 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடைபெற்ற தேர்தலில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். ஆன்மீகத்தில் தேவர் திருமகனார் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானமும், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவும் தேவர் திருமகனாருக்கு தெய்வத் திருமகனார் என்ற பெயரை பெற்றுத் தந்தது. தேவர் திருமகனார் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல், அவர் 20,075 நாட்கள் வாழ்ந்தார். சிறையிலிருந்த நாட்கள் 4,000.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தேவர் திருமகனார் பிறந்த தினமான அக்டோபர் 30-ந்தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, 1979-ம் ஆண்டு முதல் இன்றுவரை ஆண்டுதோறும், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1994-ம் ஆண்டு சென்னை, நந்தனத்தில் தேவர் திருமகனாருக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலையை அமைத்து திறந்து வைத்ததோடு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தை புனரமைத்திட ஆணையிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்நினைவகம் புதுப்பொலிவுடன் இன்றைக்கு திகழ்கின்றது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ம் ஆண்டு அறிவித்து அதன்படி 9.2.2014 அன்று இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பசும்பொன் கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து, 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தினை தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் திருமகனாருக்கு அரசு விழா, சென்னை, நந்தனத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பசும்பொன் நினைவிடத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் என தேவர் திருமகனாருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், அம்மாவின் அரசால், பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குட மண்டபம், முளைப்பாரி மண்டபம்,

முடி காணிக்கை செலுத்த கட்டடம், குடிநீர் வசதி, பேவர் பிளாக் சாலை வசதி மற்றும் பொதுக் கழிப்பிட வசதி மற்றும் தேவர் திருமகனார் நினைவிடத்திற்கான அணுகுசாலை புதிதாக பேவர் பிளாக் சாலையாக மாற்றப்பட்டது என பல்வேறு பணிகளை தேவர் திருமகனார் நினைவிடத்திற்கு அமைத்துத் தந்த அரசு அம்மாவின் அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். முழுமையாக தேவர் அய்யாவுக்கு செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான்.

கேள்வி:- தேவரின் குருநாதரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை தேச பக்த தினமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?

பதில்:-சுபாஷ் சந்திர போசை பற்றி சொன்னார்கள், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கேள்வி:- இம்மாவட்டத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் இல்லை, தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:-புரட்சித்தலைவி அம்மா இருக்கின்றபொழுதே 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, அதுவும் தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய பகுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அம்மா அவர்கள் அறிவித்து பல தொழிற்சாலைகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வழியில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்த அம்மாவின் அரசு, 2019-ம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பெரும்பாலான தொழில்கள், இதுபோன்ற பின்தங்கிய மாவட்டங்களில் துவங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணி குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணி குறித்தும் இம்மாவட்டத்திற்கு வருகை தந்தபோது தெரிவித்தேன். இந்த மாவட்டம், வளமாக, செழிப்பாக இருப்பதற்கு காவேரி-குண்டாறு என்ற மிகப் பெரிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தேன். ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் தான் அதிக ஏரிகள் இருக்கிறது. இந்த அற்புதமான திட்டத்தையெல்லாம் இந்த மக்களுக்கு வழங்குகின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்று, மீனவர் பாதுகாப்பு மண்டலமாக அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இது வேறு, அது வேறு. இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வேளாண் மண்டலப் பகுதிகளில் தான் மீத்தேன், ஈத்தேன் போன்றவை எடுத்தார்கள். அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, அங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால், அந்தப் பகுதிகளெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தைக் குறைப்பதற்கு ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன, தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான், அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அரசும் அம்மாவின் அரசுதான். ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு கூட மீனவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மானியம் வழங்கப்பட்டு, படகுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி பல வகைகளிலும் மீனவ சமுதாய மக்களுக்கு அம்மாவின் அரசு உதவி செய்து கொண்டிருக்கிறது.

கேள்வி:- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை…

பதில்:- அம்மாவின் அரசு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக, சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்பட்டதால், அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆண்டே நடைபெறுவதற்குத் தான் இவ்வளவு முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் இருப்பவர்கள், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் தான். எனவே, அரசுப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவை நனவாக்கும் எண்ணத்தில்தான் இதை நிறைவேற்றினோம்.

நான்கூட அரசுப் பள்ளியிலே படித்த மாணவன் தான். ஆகவே, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணர்வை மதித்துத்தான் நாங்கள் இந்த அரசாணையை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை, எளிய மாணவர்களும் சரிசமமாக மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் நாங்கள் இதைக் கொண்டு வந்தோம்.

இதற்கு யாரும் கோரிக்கை வைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை, எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. அப்படியிருக்கும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில், கிராமத்திலிருந்து நகரம் வரை அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தான், இந்த சட்ட முன்வடிவைக் கொண்டு வந்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பியிருக்கிறோம். காலதாமதம் ஆகிறது. இதை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள், இந்த அரசியலெல்லாம் எடுபடாது. அம்மாவினுடைய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.