தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 இடத்தில் அம்மா மினி கிளினிக் – கே.பி.முனுசாமி எம்.பி. தகவல்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட இருப்பதாக கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐகொந்தம்கொத்தப்பள்ளி, குள்ளம்பட்டி, மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதாலியூர் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி திறந்து வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பெட்டகத்தை வழங்கி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட உள்ளது. இதுவரை 13 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் இடம் பெறுவர். கிராமப்புற பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிகிச்சை நேரமாக செயல்படும். அம்மா மினி கிளினிக்கில் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்க கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனைக்கான சிகிச்கைள் வழங்கப்படும். அம்மா மினி கிளினிக்கில் இ.சி.ஜி. கருவி பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் தெர்மா மீட்டர் உட்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற உயரிய நோக்கோடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் சிறந்த முறையில் இத்திட்டத்தினை பயன்படுத்தி ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசினார்.

தொடர்ந்து ஐகொத்தப்பள்ளி, குள்ளம்பட்டி, ஆதாலியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் ஊட்டசத்து நல பெட்டகம், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.1.58 லட்சம் மதிப்பிலான காசோலைகள், 3பேருக்கு பிறப்பு சான்றிதழ்களை மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி வழங்கினார்.

இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன், (பர்கூர்), மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) வி.கோவிந்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரீனா கிரிதரன் (ஐகொந்தம் கொத்தப்பள்ளி), சுமதி சண்முகம் (குள்ளம்பட்டி), வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், ரங்கசாமி, மருத்துவ அலுவலர்கள், ராஜ்குமார், கவின், கார்த்திகா பிரியா, சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.