சிறப்பு செய்திகள்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ராமநாதபுரம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்நாள் மற்றும் 58-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள் விழா மற்றும் 58-வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன், ரவீந்திரநாத் எம்.பி., மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகரன், டாக்டர் எம்.மணிகண்டன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா, மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்களும், ஏராளமான பொதுமக்களும் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இருவரும் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கனின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்தினர். மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.