சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல் – முதலமைச்சர் உறுதி

சென்னை

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் அறிவித்தார். ேமலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அந்த குழு பரிந்துரை அளித்திருந்தது.

இந்த பரிந்துரையை ஆய்வு செய்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு கடந்த செப்டம்பர் 18-ந்தேதி அனுப்பப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஆளுநரை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கடந்த 20-ந்தேதி மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து 7.5 சதவீத மசோதா தொடர்பாக வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார் 7.5 சதவீத மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர வழிவகை செய்யும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் காலை ஆளுநர் பன்வாரிலால் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த மசோதா குறித்து இந்திய சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்ட ரீதியான கருத்தை கடந்த செப்டம்பர் 26-ந் தேதி ஆளுநர் கடிதம் வாயிலாக கேட்டிருந்தார். அவரது கருத்து 29-ந் தேதி பெறப்பட்டது. அவரின் கருத்து
பெறப்பட்டவுடன் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

செப்டம்பர் 26-ந்தேதி சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் நீட் தேர்வு வைக்கப்படும் மருத்துவ கல்வியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா, அரசியல் அமைப்பு சாசனத்தின் 14 மற்றும் 15-ம் ஷரத்துகளை மீறுகிறதா? என்பதில் உங்கள் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா இந்தியாவில் இருக்கும் அனைவருமே சமநிலையுடன் கருதப்பட வேண்டும் என்பது தான் இந்திய அரசியல் சாசனத்தின் இந்த ஷரத்துகள் வலியுறுத்தும் கருத்தாகும்.

சமூக ரீதியாக மற்றும் கல்வி அடிப்படையில், பின்தங்கி இருக்கும் மக்கள் குறித்த புள்ளி விபரங்களை நீதிபதி தலைமையிலான ஆணையம் வழங்கி உள்ளது. அதில் உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டுள்ளது. மேற்கண்ட வித்தியாசத்தை களைய மாநில அரசு எடுக்க வழி செய்துள்ளது. தமிழக அரசின் சட்ட மசோதா அரசியல் சாசனத்திற்கு நேர்மறையாக உள்ளது என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு குறித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியிருப்பது புரட்சித்தலைவி அம்மா அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இதையடுத்து முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தமிழக அரசிற்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.