தற்போதைய செய்திகள்

கோவில்பட்டி மார்க்கெட்டில் அமைச்சர் திடீர் ஆய்வு – சாக்கடை கால்வாய்களை சீரமைக்க உத்தரவு

தூத்துக்குடி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் பகுதியில் வடிகால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி வற்றிய சாக்கடை வடிகால் பகுதிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டார் அதைத்தொடர்ந்து அலுவலர்களுக்கு அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்றவும், மண் அடைப்புகளை தூர்வாரி மணல்களை அப்புறப்படுத்த உடனடியாக வடிகால் கால்வாய்களை சீரமைத்து மார்க்கெட் பகுதியை சுத்தமாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறை, நகராட்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான மழை பெய்யும். தற்போது
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் ஒரு சில பகுதியில் வடிகால் வசதி சரியாக
இல்லாமல் ஆங்காங்கே நீர் தேங்கி வணிக வளாக பகுதிகளிலும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு விரைவாக
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காத வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலே சாலை விரிவாக்க பணியின்போது ஓடை மற்றும் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வந்தது. ஒருசிலர் நீதிமன்றத்தை நாடிய காரணத்தால் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. அதன் காரணமாகத்தான் தினசரி மார்க்கெட் பகுதியில் நேற்றைய
மழையின்போது சிறிய சேதம் ஏற்பட்டது. அவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அவசர கால பணியாக இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர கால பணியாக இவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நகராட்சி அலுவலர்கள்,
நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை அமைத்தல் தொடர்பான நீதிமன்ற வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு சாலை
விரிவாக்க பணிகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு நிரந்தர தீர்வு
காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் ஆரோன் மோசஸ், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நீலகண்டன், டாக்டர் குருராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவரும், துறையூர் கூட்டுறவு வங்கி தலைவருமான துறையூர் கணேசன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி என்ற கோபி, கோவில்பட்டி நகர கழக செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், பழனிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.