தற்போதைய செய்திகள்

புலம்பெயர்ந்து மீண்டும் ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் தொடங்க நிதி உதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

புலம்பெயர்ந்து மீண்டும் ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் தொடங்க நிதி உதவியை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சார்பாக ரூ.87 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது காணை, கோலியனூர், முகையூர், திருவெண்ணெய்நல்லூர், வல்லம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 322 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் வாயிலாக மேற்கண்ட ஆறு வட்டாரங்களில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய 267 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் நீண்ட காலகடனாக வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 50 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் கண்டறியப்பட்ட புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் வீதம் 70 பயனாளிகளுக்கு 70 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு விபத்துக்களில் உயிர்யிழந்த 6 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பிட்டிலான அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

முன்னதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தசைச்சிதைவு நோய் மற்றும் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிட்டிலான அதிநவீன பேட்டரியால் இயங்கும் சிறப்பு இருசக்கர நாற்காலியினை 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிட்டிலும் வழங்கி மொத்தம் ரூ.87 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின் படி ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு நபருக்கு கருணை அடிப்படையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சக்கரபாணி(வானூர்), எம்.முத்தமிழ்ச்செல்வன் (விக்கிரவாண்டி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் இராஜேந்திரன், தனித் துணை ஆட்சியர்(ச.பா.தி) அம்ரோஸியாநேவிஸ்மேரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், ஊரக வளர்ச்சி புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் இராஜேஷ்குமார், இளம் வல்லுநர் அருண்குமார், நகர செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.