தற்போதைய செய்திகள்

நீட் பயிற்சிக்கு கூடுதலாக 20,000 பேர் விண்ணப்பம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

நீட் பயிற்சிக்கு ஒரே நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்து, 350 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கி, வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்கள் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையிலும், தங்குதடையின்றி குடிநீர் வழங்கும் வகையிலும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 1,40,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டிகளை அமைக்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி முயற்சியின் காரணமாக மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் அரசு பள்ளியில் பயிலும் 303 மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு செல்ல உள்ளனர். முதலமைச்சர் அவர்களின் இந்நடவடிக்கையானது, ஆளுநரே பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நீட் பயிற்சிக்கு 9,842 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 20,000 மாணவர்கள் ஒரே நாளில் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்விற்கான பயிற்சி ஆன்லைன் பதிவுகள் முடிவடைந்ததும், ஓரிரு நாட்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நடப்பாண்டிலேயே முழுமையாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் 5.25 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிலிருந்து அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்பொழுது பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், லக்கம்பட்டி பேரூராட்சியில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணை, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை என 350 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, பிரசவித்த தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், யூனியன் சேர்மன் மெளதீஸ்வரன், நிலவள வங்கி தலைவர் கே.என்.வேலுமணி, பேரூராட்சி செயலாளர் மோகன் குமார், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.