சிறப்பு செய்திகள்

மலைவாழ் மக்களின் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பயனாளிகள் கண்ணீர் மல்க நன்றி

தேனி

போடிநாயக்கனூர் அருகே மலை கிராம மக்களுக்கு புதிய வீடுகள் கட்ட உத்தரவிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பயனாளிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

கொரோனா காலத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மலைப்பகுதி கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், நிவாரண உதவிகளை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கி வருகிறார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மலைப்பகுதியில் மேலப்பரவு கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழுதடைந்த வீடுகளில் தாங்கள் குடியிருந்து வருவதாகவும், சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் அதனை சீரமைக்க சீரமைத்து வேண்டுமெனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக பழுதடைந்துள்ள வீடுகளை பார்வையிட்டு அப்பகுதியில் வசித்து வரும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது பழுதடைந்துள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தர வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக 50 வீடுகள் கட்டவும், சாலைகளை சீரமைக்கவும் உத்தரவிட்டார். தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.