சிறப்பு செய்திகள்

கொரோனாவை முழுமையாக தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

தமிழ்நாடு முழுவதும் நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு
முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், வெளியிடங்களுக்கு முககவசத்தை அணிந்து சென்றும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.