தற்போதைய செய்திகள்

1729 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1729 மாணவ, மாணவிகளுக்கு ரூ.68,30,369 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த தொலைநோக்குத் திட்டமான, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கிய மிகவும் அற்புதமான திட்டமாகும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும்,பெண் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காகவும், பள்ளியில் பயிலும் பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வந்தது.

எல்லாதுறைகளுக்கும் எடுத்துக்காட்டாக பள்ளிகல்வித்துறையை முன்னுதாரணமாக வைத்து, கல்வித்துறைக்கென நிதியாண்டில் அதிகமான நிதியை ஒதுக்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிகணினிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா கல்வி உபகரணங்கள் (வரைகலைப்பெட்டி, சீருடைகள், காலனிகள், சேனிட்டரிநாப்கின்கள், வரைபடம்) போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஓராண்டு கூட நீடிக்கவில்லை. உடனடியாக அந்த மாநில முதலமைச்சரால் இத்திட்டத்தை என்னால் நிறைவேற்ற முடியாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் புரட்சித்தலைவி முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவித்த இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சார்ஆட்சியர் டாக்டர் எஸ்.அனு, முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் ஏழுமலை, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் செஞ்சி கதிரவன், மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், நகர செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.