தற்போதைய செய்திகள்

வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி சரித்திரம் படைக்க கழக அம்மா பேரவை சூளுரை

மதுரை

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி சரித்திரம் படைக்க கழக அம்மா பேரவை சூளுரை ஏற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு தின நாளில் சாதித்த காட்டிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு கோடான கோடி நன்றி தெரிவித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை திருமங்கலத்தில் கழக அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் கீழ்க்கண்ட தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றினார்;-

முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் என்ற அரசுசாரா அமைப்பு இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக புள்ளி விபரத்துடன் வெளியிட்டு பாராட்டியுள்ளது.

தாய் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி தந்து இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் தலை சிறந்த மாநிலமாக தாய் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திற்கு உயர்த்திகாட்டி தலைசிறந்த மாநிலம் என்று போற்றிடும் வகையில், தமிழ்நாடு பிறந்த நாளில் சாதித்து காட்டிய சாதனை முதலமைச்சர் எடப்பாடியாருக்கும் ” கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு துணையாக நிற்கும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி சரித்திரம் படைப்போம் என்று கழக அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா வழியில் இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு தொடர் சாதனைகளை செய்து வருகிறார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை போராடி பெற்று தந்துள்ளார். இதன் மூலம் சமூக நீதி காவலராக முதலமைச்சர் திகழ்கிறார்.

இந்தியாவிலே கொரோனோ காலத்தில் சிறப்பாக பணியாற்றி நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார். தமிழகத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமரே முதலமைச்சரை பாராட்டி இருப்பது ஒட்டு மொத்த இந்திய தேசமும் பாராட்டியதற்கு ஒப்பாகும். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு பிறந்த இந்நன்னாளில் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் தமிழகத்தை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்று ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னேற்றமே தனது லட்சியமாக கொண்டும், தமிழக மக்களின் உயர்வே தன் உயர்வு என்றும் தன்னையே அர்ப்பணித்து உழைத்து இமாலய சாதனைகளை செய்து வரும் முதலமைச்சரின் சாதனை திட்டங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் மனசாட்சி இல்லாமல் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் ஏதாவது ஒரு துறையில் சிறப்பாக செயல்பட்டது என்று நற்சான்றிதழ் கிடைத்தது உண்டா என்பதை ஸ்டாலின் மனச்சாட்சியுடன் பேச வேண்டும். ஸ்டாலின் தொடர் பொய் பிரச்சாரத்தை தினந்தோறும் செய்து வந்தாலும் அதற்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் தமிழகத்தை தினந்தோறும் தலைசிறந்த நிறுவனங்கள் பாராட்டி நற்சான்றிதழ் அளித்து வருகின்றன.

திமுக ஆட்சியை எடுத்துக்கொண்டால் கடும் மின்வெட்டு, பொருளாதார சீரழிவு, நில அபகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீரழிவு இப்படித்தான் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது போல் மக்களுக்காக உழைத்து வரும் முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் வரும் தேர்தலில் வெற்றியை பரிசாக மக்கள் வழங்குவார்கள். ஆனால் திமுகவிற்கு வரும் தேர்தலில் தோல்வியை பரிசாக கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, மகாலிங்கம், அன்பழகன், சேர்மன் பாவடியான், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன், லட்சுமி, சிங்கராஜ பாண்டியன், ஆர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.