தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கால்நடைகளுக்கு இலவச ஊசி, மருந்து – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

திருப்பூர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கால்நடைகளுக்கு இலவசமாக ஊசி மற்றும் மருந்து போடப்படுகிறது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், சின்னாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 285 கிராமப்புற பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம், தலா ரூ.2025 மதிப்பில் என ரூ.5,77,125 மதிப்பிலான விலையில்லா நாட்டுக்கோழிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மா அவர்களின் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். மேலும், கால்நடை பராமரிப்புத்துறைக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து அதிகப்படியான நிதியினை ஒதுக்கி தந்துள்ளார்.

குறிப்பாக விவசாயிகளின் வாழ்வு மேம்பாட்டிற்காகவும் மற்றும் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கிராமப்புற பெண்களுக்கு தலா 25 எண்ணிக்கையிலான விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராம ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வந்த இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் செயல்படுத்தும் சிறப்பு திட்டமான நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தில் இந்த வருடம் 2.50 லட்சம் மகளிர்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கால்நடைகளுக்கு என நடமாடும் மருத்துவ அவசர ஊர்தி 1962 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் அனைத்து உதவிகளும் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் திறந்து வைக்கப்படும் கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு இலவசமாக ஊசி மற்றும் மருந்துகள் போடப்படுகிறது. இதனை கால்நடை வளர்ப்போர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது கால்நடைகளுக்கு எந்தவொரு நோயின்றி வளர்த்து. தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்நிகழ்வின் போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி, பொள்ளாச்சி தெற்கு-2 ஒன்றிய கழக செயலாளர் மு.இளஞ்செழியன், சின்னாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட பிரதிநிதி மகாராஜா மதியழகன், பேரூராட்சி கழக செயலாளர் சுந்தரராஜ், பாசறை செயலாளர் மஜீத், மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, துணை இயக்குநர் ராகவன், உதவி இயக்குநர்கள் ஓம் முருகன், திருகுமரன் மருத்துவர் முருகன், கால்நடைத் உதவி மருத்துவர்கள் கருப்பையா, முருகானந்தம், சதீஸ், மதன், மற்றும் அரசு அலுவலர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.