தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையை கழக கோட்டையாக மாற்றுவோம் – தெற்கு மாவட்டசெயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சூளுரை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தை கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் உள்ள 138 வாக்குச்சாவடிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் மண்டல வாரியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் முதலமைச்சரால் அறிவிக்கப்படுகின்ற திட்டங்களை இந்த அரசு முழுமையாக நிறைவேற்றி உள்ளது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி படித்த இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்.

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் பணியாற்றுகின்ற நிர்வாகிகள் இந்த இயக்கத்தினுடைய நாற்றங்கால்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள். புதிய திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள். அரசின் திட்டங்களை மக்கள் பெறுகின்ற வகையில் உறுதுணையாக செயல்படுங்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தை கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம். 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி அமர்வதற்கு திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கடுமையாக உழைத்து திமுகவிடம் உள்ள இந்த தொகுதியை கைப்பற்றுவோம். அதற்கு பாசறை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக நிர்வாகிகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் அறிக்கை அரசியல் நடத்தி வருகின்றனர். மக்களை நேரடியாக மாவட்டங்கள் தோறும் சென்று சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தியும், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வரும் சாதனை தலைவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுமா, ஏசி அறைக்குள் இருந்து வெற்று அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்ற அறிக்கை தலைவர் வேண்டுமா என்று மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், திருவண்ணாமலை நகர கழக செயலாளர் செல்வம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் தொப்பளான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கராத்தே பாண்டு, மாவட்ட கலைப்பிரிவு தலைவர் பழனி, நகர அவைத்தலைவர் பழனி, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி சங்கரன், வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், சரவணன், ரமேஷ், வெங்கடேசன், தேவராஜ், பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.