தற்போதைய செய்திகள்

கழகத்தின் நல்லாட்சி தொடர ஒன்றுபட்டு உழைத்திடுவோம் – அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரை

விழுப்புரம்

கழகத்தின் நல்லாட்சி தொடர்ந்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பூட்டைரோட்டில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார். இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. டாக்டர் காமராஜ், தமிழ்நாடு சக்கரை ஆலை இணையத்தின் தலைவர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் அரி கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பெருமாள், ரவி, ஆப்பிள், நகர செயலாளர்கள் குணசேகரன், கருப்பன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

கடந்த 4 ஆண்டு கழக ஆட்சியில் தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. மேலும், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. கழகத்தில் தான் சாதாரண தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை யார் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வரமுடியும். ஆனால், தி.மு.க.வில் இதுபோல் முடியாது.

நடுநிலையாளர்களின் வாக்குகளை கணக்கெடுத்து அவர்களின் வாக்குகளை பெற வேண்டும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆட்சி மீண்டும் தொடர தொண்டர்கள் இன்று முதல் ஒற்றுமையாக செயல்பட்டு, தி.மு.க.விற்கு டெபாசிட் கூட கிடைக்காத வகையில் கழகம் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் தமிழகத்தில் 3-வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அரும்பாடு பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, மாவட்ட விவசாய அணி செயலாளர் சன்னியாசி, மாவட்ட பாசறை செயலாளர் ராகேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செந்தில்குமார், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் கரிகாலன் ரமேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.