தற்போதைய செய்திகள்

வாக்குச்சாவடி எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் – தேர்தல் ஆணைய கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வலியுறுத்தல்

சென்னை

வாக்குச்சாவடி எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கழகத்தின் சார்பாக தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டோம். தேர்தல் அதிகாரி இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் புதியதாக வாக்காளராக சேர்வதற்கும், முகவரி மாற்றத்திற்காகவும் விண்ணப்பித்துள்ளார்கள் என்று தெரிவித்தார். ஆன்லைன் மூலமாக 80 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் முதல்முறையாக பெயர் சேர்க்க,நீக்க விண்ணப்பித்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

கழகத்தின் சார்பாக நாங்கள் கொரோனா காரணமாக முகவரி மாறியவர்களை, வீடு மாறியவர்களை வாக்காளர்களாக சேர்பதற்கு குறுகிய கால வாய்ப்பு அளித்து புதிய முகவரியில் அவர்களை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.இதனைப் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

வெளிநாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தங்களுடைய பெயர்களை ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முற்படும்போது அவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தோம். வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

இந்த கருத்துகள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். வாக்காளர் சிறப்பு முகாம்கள் நான்கு நாட்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.