தற்போதைய செய்திகள்

முகக் கவசம் அணியாதவர்களுக்கு தியேட்டரில் அனுமதி கிடையாது – வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

சென்னை

முகக் கவசம் அணியாதவர்களுக்கு தியேட்டரில் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

வரும் 10-ந்தேதி தமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:-

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.திரையரங்கு வளாகத்திற்குள் எப்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அனைவரும் ஆரோக்கிய செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

திரையரங்கின் நுழைவாயிலில்,பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.கொரோனா நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது.

சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மொத்த இருக்கைகளுள் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியே கடைபிடிக்கும் வகையில் இருக்கை அமைப்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.