கன்னியாகுமரி

3 ஒன்றியங்களுக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு – டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை உட்பட 3 ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் கூறி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், அழகப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி, அஞ்சுகிராமம் காவல் நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் தலைமையில், அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் நேற்று குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் நல பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

அழகப்பபுரம் ஆரம்ப சுகாதார மையத்தின் வாயிலாக, தெற்கு பார்வதிபுரம், சிவசுப்பிரமணியபுரம், மேட்டுவிளை, சத்தியா நகர், வடக்கு பகவதிபுரம், புதுகுடியிருப்பு, அஞ்சுகிராமம், சிவராமபுரம், செண்பகராமபுரம், ஜேம்ஸ்டறண், லெட்சுமிபுரம், சங்கரலிங்கபுரம், பிச்சை குடியிருப்பு, பரப்புவிளை, காணிமடம், கனகப்பபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த 12 ஆயிரம் பொதுமக்கள் இந்த முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் வாயிலாக பயனடைவார்கள்.

கிராமப்புறங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய பொதுமக்களுக்கு அந்தப் பகுதியிலேயே, அம்மா மினி கிளினிக் செயல்படும்போது, அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி, தங்களுடைய நோயை குணப்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில்கொண்டு, சனிக்கிழமை தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் அம்மா மினி கிளினிக் செயல்படும்.

நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, ஆராக்கியபுரத்திலிருந்து, நீரோடி வரை கடலரிப்பு தடுப்பு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய மருத்துவக்கல்லூரி துவக்கி வைக்கப்பட்டது. தற்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்கு சுமார் ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசினார்.

முன்னதாக ராஜாக்கமங்கலம் ஒன்றியம், கேசவன்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட, மரியாயின் மாசற்ற இருதய அன்னை ஆலயம் அருகில் ரூ.6.75 லட்சம் மதிப்பில் 2 கழிப்பறையுடன் கூடிய பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி, சகாயநகரில் ரூ.14.08 லட்சம் மதிப்பில் உணவு தானிய கிட்டங்கி கட்டும் பணி ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.