திருப்பூர்

முதலமைச்சருக்கு எழுச்சி மிகு வரவேற்பு: திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் முடிவு – மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தகவல்

திருப்பூர்

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள 6-ந்தேதி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு 3 இடங்களில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள நாளை (6-ந்தேதி) திருப்பூர் வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனை வழங்கினார். அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளரும், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன், திருப்பூர் ஒன்றிய செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 

வருகிற 6-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூரில் நடைபெறவுள்ள ஆய்வு கூட்டத்துக்கு வருகை தருகிறார். திருப்பூர் மாவட்டம் என்றைக்கும், எதிலும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நம்முடைய எழுச்சியான வரவேற்பினை அளிக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் 2021-லும் மிகப்பெரிய வெற்றியை கழகம் பெற வேண்டும் என்பதை காட்டக்கூடிய வகையில் நம்முடைய வரவேற்பு அமைய வேண்டும். முதல்வர் தந்த திட்டங்களுக்கு நன்றி கூறும் வகையில் நமது வரவேற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும். 6-ந்தேதி மதியம் 3 மணிக்கு முதல்வர் வர இருப்பதால் நாம் முன்னதாகவே பெரும் வரவேற்பு அளிக்க வேண்டும். வடக்கு தொகுதியில் ஒரு இடம், திருப்பூர் தெற்கு தொகுதியில் ஒரு இடம், பல்லடத்தில் ஒரு இடம் என மூன்று இடங்களில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

தொண்டர்கள் திரண்டு வந்து, சமூக இடைவெளியுடன் வரவேற்பு அளிக்க வேண்டும். திருப்பூர் வடக்கு தொகுதியில் இருந்து, சின்னக்கரை வரை கொடிகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் என முதல்வருக்கு வரவேற்பை சிறப்பாக அளிக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

கூட்டத்தில் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் பேசுகையில், பல்லடம் தொகுதியில் பெரும் எழுச்சியுடன், கொடி தோரணங்கள் கட்டி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினரும் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும் என்றார்.

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பேசுகையில், நமது முதல்வர் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளார். இது போன்ற சாதனைகளை எடுத்துரைக்கும் வண்ணம் போஸ்டர்களை ஒட்டி வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.

திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் பேசுகையில், முதல்வரின் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களுடன் திரண்டு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், கருவம்பாளையம் மணி, ஏ.எஸ்.கண்ணன், கருணாகரன், கணேஷ், சிவாச்சலம், கலைமகள் கோபால், கேபிள் சிவா, தர்மலிங்கம், தண்ணீர் பந்தல் நடராஜன், சந்திரசேகர், நீதிராஜன், ரத்தினகுமார், பழனிவேலு, ஷாஜகான், பரமராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.