தற்போதைய செய்திகள்

குடிமராமத்து நாயகனாக முதலமைச்சர் திகழ்கிறார் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதம்

அம்பத்தூர்:-

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாருவதன் மூலம் குடிமராமத்து நாயகனாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கிறார் என்று அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓரகடம், பட்டரவாக்கம், புதூர், போன்ற பகுதிகளில் புனரமைக்கப்பட்ட குளங்கள் மற்றும் நீர் நிலைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை வரவேற்கும் வகையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தலைமையில் கழகத்தினர் கொட்டும் மழையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூர்வாரி ஆழப்படுத்தி பொதுமக்களுக்கு அர்ப்பணித்து செய்து வருகிறார்.

அவ்வகையில் ஒரகடம் தாமரைக்குளம், வைரவன் குளம், பட்டரவாக்கம் மாரியம்மன் கோவில் குளம் ஆகியவற்றை தூர்வாரி பொதுமக்களுக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளை தூர்வாரி தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இன்று குடிமராமத்து நாயகனாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலை வசதிகள் எல்இடி விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.மேலும் குளம் தூர்வாரும் பல்வேறு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பார், திறந்து வைப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.

நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அவைத்தலைவர் எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் முகப்பேர் பாலன், டன்லப் வேலன், கே.பி.முகுந்தன், சிமியோன் பிரபு, எல்.ஜி.பிரகாஷ், ராஜா சிவ பாலன், ரோஸ், சிவி.மணி, ஏழுமலை மேஸ்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.