சிறப்பு செய்திகள்

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2023 மார்ச்சுக்குள் குடிநீர் இணைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும்ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2023 மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பு வழங்க அரசு முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மத்திய ஜல் சக்தி துறையின் சார்பில் வருகின்ற 2024-ம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டபணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் பாரத பிரதமருக்கும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் 2024-ம் ஆண்டிற்குள் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் டப்பாடியார் ஊரகப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 79,395 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள ஊரகப்பகுதிகளில் 99.11 சதவீத பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமப்புற குடியிருப்பு பகுதிகளின் திருத்தப்பட்ட அடிப்படை தகவல்கள் கடந்த மே மாதம் ஜல் ஜீவன் மிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 388 ஊராட்சி ஒன்றியங்களில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 79,395 கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன.

கடந்த 01.04.2020 வரை 1,26,89,000 வீடுகளில் 21,92,000 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,04,97,000 வீடுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு 2020-21-ம் ஆண்டிலும், 35 லட்சம் வீடுகளுக்கு 2021-22-ம் ஆண்டிலும் மற்றும் 30 லட்சம் வீடுகளுக்கு 2022-23-ம் ஆண்டிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2024-ம் ஆண்டிற்கு ஓராண்டு முன்னதாகவே தமிழ்நாட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.

நடப்பு 2020-21-ம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் பங்களிப்பாக ரூ.921 கோடி இத்திட்டத்தை நிறைவேற்ற அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 19,74,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.2,264 கோடியே 74 லட்சம் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2020-21-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது வரை நடப்பு நிதியாண்டில் 6.10 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தாண்டின் இலக்கில் 18.2 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு தரபட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

மத்திய ஜல்சக்தி துறையின் சார்பில் 18.08.2020 அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் 15,120 பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. அரசு ஆணை மற்றும் வழிகாட்டுதல்களின்படி நிதியாதாரங்கள் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 2021 பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.

இப்பணிகள் கலந்தாலோசகர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். இத்திட்டப்பணிகளை நிறைவேற்றிடவும், விரைந்து செயல்படுத்தவும், நிர்வாக அனுமதி பெற மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றிட செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவிலான செயல் திட்டம் விரையில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 2023 மார்ச் மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவிகிதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஷ்வரன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.