தற்போதைய செய்திகள்

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கியது அம்மா அரசு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கியது அம்மா அரசு தான் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதியில் உள்ள செய்யாறு ஒன்றியத்தில் 7 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 1289 மாணவர்களுக்கும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 12 மேல்நிலைப்பள்ளிகளை 1258 மாணவர்களுக்கும், அனக்காவூர் ஒன்றியத்தில் 6 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 354 மாணவர்களுக்கும் என மொத்தம் 2901 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செய்யாரில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப்நந்தூரி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், புத்தகப்பை, 3 செட் சீருடை, உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வழங்கப்படுகிறது. மேலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சலுகைகளை அம்மாவின் அரசு வழங்குவதால் தான் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில செல்கின்றனர்.

மேலும் மருத்துவப்படிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி உள் ஒதுக்கீடு பெற்று அரசு பள்ளி மாணவனாலும் மருத்துவப்படிப்பை படிக்க முடியும் என செயல்படுத்தி காட்டி உள்ளார். மேலும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் தனியார் கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்த முடியாது என்பதால் அந்த கட்டணத்தையும் அரசே ஏற்று ஏழையாலும் கனவு கண்ட மருத்துவபடிப்பை வழங்கியவர் முதல்வர். இந்த ஆண்டு 325 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு கல்வித்துறையில் சாதனை படைத்தவர் எனவே முதல்வருக்கு ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

நிகழ்ச்சியில் செய்யாறு கோட்டாட்சியர் விமலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், செய்யாறு கல்வி அலுவலர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், அருகாவூர் அரங்கநாதன், சி.துரை, வே.குணசிலன், மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பூக்கடை கோபால், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.