தற்போதைய செய்திகள்

பன்னம்பாறை ஊராட்சி வடலிவிளையில் ரூ.15 ஆயிரம் கோடியில் தொழிற்பேட்டை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்

தூத்துக்குடி

பன்னம்பாறை ஊராட்சி வடலிவிளையில் ரூ.15 கோடியில் தனியார் தொழிற்பேட்டை அமைக்க செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் பன்னம்பாறை ஊராட்சி வடலிவிளையில் இந்தியன் பவர் பிராஜெக்ட்ஸ் லிமிடெட், விகாஷ் இன்டஸ்ரியல் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் ரூ15 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் 1400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் தனியார் தொழிற்பேட்டை ஏரோஸ்பேஸ் மற்றும் இன்டஸ்டிரியல் பார்க் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், மருத்துவமனை, இலவச கல்வி நிறுவனங்கள் அமையவிருக்கிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து வடலிவிளையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1400 ஏக்ஙகரில் தனியார் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து தொண்டு அடிக்கல் நாட்டி தொழிற்பேட்டை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிற்பேட்டை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் செயல்படத்துவங்கும் அப்போது இந்த பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், ஏராளமானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலையுள்ளது.