தற்போதைய செய்திகள்

பொம்மையார்பாளையம் கிராமத்தில் ரூ.19 கோடியில் நீர்மூழ்கி தடுப்பணை – அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பினை தடுத்திடும் பொருட்டு மீன்வளத்துறை சார்பில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நீர்முழ்கி தடுப்பணைகள் கட்டுவதற்கான பணியினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை மூலம் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் கிராமம் தொடர்ந்து கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு புயலின் போதும் மற்றும் காற்றின் திசை மாறும் போதும் ஏற்படும் பேரலைகளால் இக்கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகளும், சாலைகளும், கட்டடங்களும் கடலினுள்ளே இழுத்து செல்லப்படுகின்றன.

இக்கிராமத்தினை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்திட தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இக்கிராமத்தில் ஆய்வு செய்து கடலின் உள்ளே சுமார் 250 மீட்டர் தொலைவில் நீர்முழ்கி தடுப்பணைகள் அமைக்க மீன்வளத்துறைக்கு விரிவான திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் முதலமைச்சர் 09.09.2020 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள வருகை புரிந்த போது நீர்முழ்கி தடுப்பணைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பினை தடுத்திடும் பொருட்டு மீன்வளத்துறை சார்பில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நீர்முழ்கி தடுப்பணைகள் கட்டுவதற்கான பணியினை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் சுமார் 1350 மீட்டர் நீளத்திற்கு இரண்டு அடுக்கு நீர்முழ்கி தடுப்பணைகள் சுமார் 3.50 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் பொம்மையார்பாளையம் கிராமம் கடலரிப்பிலிருந்து முழுவதுமாக பாதுகாக்கப்படும். போதிய அளவு கடற்கரை உருவாகும். இதனால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும். மேலும்,மீன்பிடி தொழில் வளம் பெருகும் மற்றும் மீனவ மக்களின் சமூக பொருளாதார நிலை உயரும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் நித்திய பிரியதர்ஷினி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், நகர செயலாளர் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜானகிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமதுஷெரீப், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லப்பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அமுரூதீன், தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணைய துணைத்தலைவர் கந்தன், கூட்டுறவு சங்க தலைவர்கள் குமார், பிரபு, வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.