தற்போதைய செய்திகள்

வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

பொதுமக்களின் உயிரை காப்பது நமது கடமை. எனவே வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார் :- 

தீபாவளி சமயத்தில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் விதவைகளுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படும். அதன்படி
சென்னை மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் வேல் யாத்திரை குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கை, களப்பணிகள் காரணமாக உச்சி முதல் அடிமட்டம் வரை சென்னை உள்ளிட்ட தமிழகம் வரை கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். ஆனால், இரண்டாவது அலை, மூன்றாவது அலையையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. அதனால் பொதுமக்களை காக்க வேண்டியது யார்? அரசாங்கத்தின் கடமையல்லவா? அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு பொதுமக்களின் உயிரை காக்கும் தலையாய கடமை.

அந்தக் கடமையை உணர்ந்துதான் இந்த நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என உணர்த்தியுள்ளோம். அதனால்தான் தமிழக அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அவர்கள் உணர்ந்து பொதுமக்களுக்காக, பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் வேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவது அவர்கள் கட்சிக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. தடை என்பதை அரசு அவர்களுக்கு தெரிவித்து விடும்.

அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் ஆக்ட் உள்ளது. சட்டமில்லாமல் நாடு இல்லை. சட்டம் உள்ள நாட்டில் நாம் அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் உண்மையில் ஜனநாயகப் பண்பு. ஜனநாயகத்துக்கு உற்றவர்கள் என்று சொல்ல முடியும்.சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இது பாஜகவுக்கு மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாகச் சட்டத்தை மதிக்க வேண்டும். அது எல்லோருக்கும் அழகு. இதைத் தனி மனிதனாக நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு, ஏழு பேர் விடுதலை வழக்கில் மறைந்த முதல்வர் அம்மா வழியில் ஒரு தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். தற்போது உச்ச நீதிமன்றம் அதில் கருத்துத் தெரிவித்துள்ளது. கவலை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆளுநர் உச்ச நீதிமன்றக் கருத்தைக் கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.ஆன்லைன் விளையாட்டு தடை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.