சிறப்பு செய்திகள்

சென்னை கிண்டி,ஒரகடத்தில் உயர்திறன் மேம்பாட்டு மையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில், சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் – நிலை –II -ன் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜெ.ஐ.சி.ஏ.) மற்றும் தமிழ்நாடு அரசிற்குமிடையே 50:50 விகிதாசார பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக 1 கோடி ரூபாயும், தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக காவேரி மருத்துவமனையின் 1 கோடி ரூபாய் பங்களிப்புடன், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக, லாப நோக்கமற்ற நிறுவனமாக சென்னை கிண்டியில், அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இம்மையத்தில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆடியோ காட்சி விரிவுரை அரங்கம், நிர்வாக அலுவலகங்கள், மாநாடு மற்றும் உள்கூட்ட அரங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தின் மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை சுகாதார பணியாளர்களுக்கும் உயர்நிலை திறன் பயிற்சி மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, உயரிய வேலைவாய்ப்பினை அவர்கள் பெற உறுதி செய்வதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் இம்மையத்துடன் ‘வேர்ல்டு ஹெல்த் ஆர்கனிஷேசன்’ எனப்படும் ‘உலக சுகாதார அமைப்பும்’ கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கொரோனா தொற்று தொடர்புடைய பயிற்சி பாடதிட்டத்தினை தொடங்குகிறது.

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் – நிலை II-ன் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசிற்குமிடையே 50:50 விகிதாசார பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக 1 கோடி ரூபாயும், தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக, சரக்கு நகர்வு மேலாண்மைக்கான துறை திறன் குழுமத்தின் 1 கோடி ரூபாய் பங்களிப்புடன், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இம்மையத்தில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் சரக்கு நகர்வு மேலாண்மை குறித்த உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம்

முதலமைச்சர் கடந்த 28.11.2019 அன்று நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில், தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்தும் வகையில், வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, முதலமைச்சர் முன்னிலையில், தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் வாணியம்பாடியில் 20 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.