தற்போதைய செய்திகள்

பண்டிகை காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிப்பீர் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை

பண்டிகை காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மிக துல்லியமாக படம் எடுக்கும் அதி நவீன சிடி ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு மருத்துவமனையில் தான் தொடங்கப்பட்டது. அதில் நோயாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் கண்டறிந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 115 சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக இருப்பதாக பிரதமர் பாராட்டியுள்ளார். குழந்தைகளுக்கு கொரோனா தொற்று 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பரவுகிறது. வளர்ந்த நாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் இரண்டாவது அலை கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வருகிறது.

பண்டிகை காலங்களில் பொருட்களை வாங்க வருபவர்களும், விற்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதனையும் மீறி அதிகளவில் கூட்டம் கூடினால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் கூடும் பகுதிகளுக்கு அனுப்பக்கூடாது. நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள் பண்டிகை காலப் பொருட்களை சென்று வாங்க வேண்டும்.

டெல்லியில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம், தசரா பண்டிகையின் போது கவனக்குறைவாக செயல்பட்டதால் தான். எனவே, பண்டிகை காலங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றவும், அதனை கண்காணிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.