சிறப்பு செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை

இந்திய விடுதலை போரில் தன் வாழ்வை துச்சமென மதித்து போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும். எனவே அவரது வழியில் நாம் அனைவரும் நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என உறுதி ஏற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பரம்பரை பரம்பரையாய் அடிமை தளையில் சிக்குண்ட நம் பாரத நாடு இன்று அனைத்து உரிமைகளையும் பெற்ற சுதந்திர நாடாக, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் இந்தியா முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டது தான்.

அவ்வாறு அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆளவந்த ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி சுதந்திர விதையை விதைத்தவரும், “வானம் பொழியுது, பூமி விளையுது, மன்னன் காணிக்கு வரி ஏன் செலுத்த வேண்டும்?” என்று வினவி தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளாளில் அவருக்கு எனது வீர வணக்கத்தையும், மரியாதையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரத்தையும், விவேகத்தையும் தன்னகத்தே கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் அனைத்து பாளையக்காரர்களிடமும் தீயாய் பரவி அவர்களின் நெஞ்சங்களில் வீரத்தை விதைத்தது. அனைவரது மனங்களிலும், அடங்கியிருந்த விடுதலை உணர்ச்சியை தட்டி எழுப்பியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு பாஞ்சாலங்குறிச்சியின் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது.

போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த சூழ்நிலையிலும், ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்த போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். மரத்தடியில் விசாரணை நடத்திய ஆங்கிலேய அரசு வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு குற்றவாளி என்று கூறியது.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்காத வீரபாண்டிய கட்டபொம்மன், “தாய் மண்ணை காப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை திரட்டினேன், போர் நடத்தினேன்” என வீர முழக்கம் செய்து கொண்டே தூக்குமேடை ஏறினார். தூக்கு மேடை ஏறிய பிறகும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பேச்சில் வீரமும், துணிச்சலும் நிறைந்திருந்தது.

“இப்படி சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பாதுகாப்பதற்காக போரிட்டு மடிந்திருக்கலாம்” என்ற உணர்வு வீரபாண்டிய கட்டபொம்மனிடம் மேலோங்கி இருந்தது. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த தமிழ் மண்ணின் தவப்புதல்வர் 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி ஆங்கிலேய அரசால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

இப்படிப்பட்ட மாவீரனுக்கு அன்னார் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவுப் பூங்கா அமைக்கப்படுமா என்ற கேள்வி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 09-04-2013 அன்று எழுப்பப்பட்டபோது, “ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த நமது நாட்டின் உண்மையான முதல் சுதந்திர போராட்டத் தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் தான்.

அவருடைய தேச பக்தி, அவருடைய தியாகம் யாராலும் மறுக்க முடியாதவையாகும். ஆகவே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவை போற்றும் வகையில் கயத்தாறில் தமிழக அரசு ஒரு மணி மண்டபத்தை எழுப்பும்” என்று உடனடியாக பதில் அளித்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதற்கு காரணம் இருவரிடமுமே தேச பக்தி மிகுந்து இருந்தது தான்.

இதனைத்தொடர்ந்து, ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு அம்மா அவர்களால் 18-06-2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மிக சிறந்த மனிதாபிமானியாகவும், தேசிய வாதியாகவும், அனைத்து சமுதாய மக்களுக்கும் இணக்கமான அரசனாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்திய விடுதலை போரில் தன் வாழ்வை துச்சமென மதித்து அன்னை பாரதத்தின் அடிமை தளையை தகர்த்தெறிய பாடுபட்டு, வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் வீண்போகாமல் காலந்தோறும் பிறை மதியென வளர்ந்து விடுதலை பெற உதவியதை நினைத்து அந்த பெருமை மிக்க அடிச்சுவட்டில் நாம் அனைவரும் நாட்டு பற்றுடன் வாழ்வோம் என்று அவர் பிறந்த நாளான இன்று உறுதி ஏற்போம். குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள் இந்த பூமி உள்ளளவிலும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார்.