தற்போதைய செய்திகள்

தரகம்பட்டியில் ரூ.5.5 லட்சத்தில் நவீன ஆவின் பாலகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்

கரூர் மாவட்டம் ஆவின் மூலம் பி.உடையாப்பட்டியில் ரூ.7.08 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிர்விப்பு மையத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் தரகம்பட்டியில் ரூ.5.5 லட்சம் மதிப்பில் நவீன ஆவின் பாலகம் அமைப்பதற்கான பணியையும் அவர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 28.08.2019-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை சேர்ந்த 155 முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 78,700 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 5,790 உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் செயல்படும் தலா 5,000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட வகையில் கரூர், சின்னான்டிபட்டி, தரகம்பட்டி, தாளியாம்பட்டி, வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் பாலானது சேகரிக்கப்பட்டு குளிரூட்டப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கரூர் குளிர்வு நிலையம் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாகும். முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி 2,768 லிட்டர் பால் உள்ளூர் விற்பனையாக செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 5,600 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், தயிர் போன்ற பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு 10.10.2020 வரை பால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

சிறிய அளவு கொள்ளளவுடைய 10 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் 7 கூட்டுறவு சங்கங்களில் அமைக்கபட்டுள்ளது. இதில் களிங்கப்பட்டி, தலையாடிப்பட்டி, மேலமேட்டுப்பட்டி, ஓண்டாம்பட்டி ஆகிய சங்கங்களில் தலா ஒரு இடத்திலும், மேலமேடு மற்றும் குப்பக்கவுண்டன் வலசு ஆகிய சங்கங்களில் தலா இரண்டு பால் குளிர்விப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதில் பி.உடையாப்பட்டியில் 500 லிட்டர் பாலினை குளிரூட்டும் வகையில் ரூ.7.08 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிர்விப்பு மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணைத்தலைவர் ந.முத்துக்குமார், கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.செல்வராஜ், ஆவின் தலைவர் எம்.எஸ்.மணி, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சேனை பி.செல்வம், ஆவின் பொதுமேலாளர் நடராஜன், மேலாளர் துரையரசன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.