தற்போதைய செய்திகள்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 19-ந்தேதி கரும்பு அரவை தொடக்கம் – அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

திருவள்ளூர்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி 19-ந்தேதி தொடங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டரங்கத்தில், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் (சர்க்கரை) ஆர்.ஆனந்த குமார், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பருசீவல் நாற்றுக்கள் மூலம் கரும்பு நடவு செய்வதற்கு மானியத்தொகை ரூ.21,09,375 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட சக்கரமநல்லூர் கிராமத்தை சார்ந்த குப்பம்மாளுக்கு ரூ.18750 மானியத்தொகையில் பருவ சீவல் நாற்றுகளும், எர்ரப்ப நாயுடு கண்டிகை கிராமத்தை சார்ந்த ஜானகிராமனுக்கு பருசீவல் நாற்றுக்கள் மூலம் கரும்பு நடவு செய்ததற்கான மான்ய தொகைக்கான காசோலை ரூ.15093-ம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020-21-ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகள் 19.11.2020 தேதி முதல் துவங்க உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

பின்னர் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையினை நவீனப்படுத்துவதற்கான திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார்.இறுதியாக, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் சவால்கள் நிறைந்த நிலையில் கூட ஊக்கமாக பணியாற்றி வரும் சர்க்கரை ஆலை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அமைச்சர் அங்கீகார சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பொன்னுரங்கம், துணைத் தலைவர் ஜெய்சங்கர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஆர்.சித்ரா, 18 சர்க்கரை ஆலைகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.