தற்போதைய செய்திகள்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.4 கோடியில் அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.

சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இம்மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி தொடங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி ஏற்கனவே 8 இடங்களில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி மூலம் உடல் முழுவதும் 10 வினாடிகளிலும், இருதயம் மற்றும் இருதய ரத்த நாளங்களை 2 வினாடிகளிலும் மிக துல்லியமாக படம் எடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 115 சி.டி.ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டில் மட்டும் 55 சி.டி.ஸ்கேன் கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத் துறையில் அம்மா அவர்களின் ஆட்சி பொற்கால ஆட்சியாக செயல்பட்டு வந்துள்ளது, செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 64,193 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1100 குழந்தைகளுக்கு எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அதிகபட்சமாகும். மேலும் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் தொற்று பாதிப்பு அளவு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

தற்பொழுது பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும். குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் வெளியே செல்வதை தவிர்த்திட வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்கள் பொருட்களை வாங்க சென்று வாங்கலாம். அவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.