சிறப்பு செய்திகள்

வலிமை மிக்க கழகத்தில் தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது – முதலமைச்சர் ஆவேச பேச்சு

திருச்சி

வலிமை மிக்க கழகத்தில் ஒரு தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது. முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

இன்றைக்கு விவசாயிகளுடைய ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி கற்க, எங்களுடைய அரசு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். தமிழகம் முழுவதும் 52 லட்சம் மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கூறிக்கொண்டு வருகிறார்.

அவர் பேசும் போது, கழகம் உடையும் என்று கூறுகிறார். எந்த காலத்திலேயும் கழகம் உடையாது, உங்களால் ஒரு தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. கழகம் ஒரு உயிரோட்டமான, வலிமை மிக்க இயக்கம். கழகத்தில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது, முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நான் ஆட்சி பொறுப்பு ஏற்கின்றபோது எவ்வளவு சிரமங்கள் இருந்தன என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். பலபேர் நம்பவே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 10 நாட்கள் இருப்பாரா, ஒரு மாதம் இருப்பாரா, ஆறு மாதம் இருப்பாரா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக உங்கள் ஆசியோடு இன்றைய தினம் 3 ஆண்டுகள் 10 மாத காலமாக வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகின்றேன். ஸ்டாலின் அவர்களே நீங்கள் எப்போது சட்டமன்றத்தில் வந்தீர்களோ அதே கால கட்டத்தில் தான் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று நானும் சட்டமன்றத்திற்கு வந்தேன். ஆனால், நீங்கள் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு.

நான் எனது ஊரில் சிலுவம்பாளையத்தில் சாதாரண கிளைச் செயலாளராக தொடங்கி, கடுமையாக உழைத்தேன், கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். படிப்படியாக உயர்ந்து ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளராக இருந்தேன். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆனேன். இன்றைய தினம் உங்களுடைய அருளாளும், அம்மாவுடைய அருளாளும் முதலமைச்சராக இருக்கின்றேன். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு கிடையாது உங்கள் தந்தை முதலமைச்சர் என்பதால் குறுக்கு வழியில் வந்தீர்கள்.

என்னைப்போல் கஷ்டப்பட்டு வந்திருந்தால் ஸ்டாலினுக்கு அந்த அருமை தெரிந்திருக்கும். ஸ்டாலின் அவர்களுக்கு உழைத்துப் பழக்கம் இல்லை, உழைப்பைப்பற்றி தெரிவதற்கும் வாய்ப்பில்லை. உழைப்பால் உயர்ந்தவன் என்றும் வீழ்ந்து போக மாட்டான். உங்களுக்கே இவ்வளவு தில் இருந்தால், உழைத்து வந்த எனக்கு எவ்வளவு தில் இருக்கும். இரவல் காலில் நிற்கும் உங்களுக்கு இவ்வளவு வலுவிருந்தால், சொந்த காலில் நிற்கும் எனக்கு எவ்வளவு வலுவிருக்கும். இவன் கிராமத்தில் இருந்துதானே வந்திருக்கிறான். எப்படி வேண்டுமானாலும் பேசலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராகிவிடும். கழகம் இருபெரும் தெய்வங்களின் சக்தி பெற்ற கட்சி.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.