தமிழகம் தற்போதைய செய்திகள்

மதுரை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் மதுரை மாவட்டம், மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துயிற்கூடங்கள், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

குழந்தை நலக் குழுக்கள் வழியாக இளைஞர் நீதி அமைப்பின் கீழ்வரும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை அரசு குழந்தை இல்லங்களில் அனுமதித்து அவர்களுக்கு பாதுகாப்பு, நீண்ட கால பராமரிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வு, கல்வி, பயிற்சி, மேம்பாடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் 13.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986-ம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது. தற்போது இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை மாவட்டம், மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் 2,210 சதுர மீட்டர் பரப்பளவில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 குழந்தைகள் தங்கி பயனடையும் வகையில் துயிற்கூடங்கள், சமையலறை, உணவுக்கூடம், வகுப்பறைகள், கண்காணிப்பாளர் அறை, அலுவலக அறைகள், பணியாளர் அறைகள் மற்றும் ஆலோசனை , ஆற்றுப்படுத்தும் அறை உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் எஸ். மதுமதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.