தமிழகம்

சென்னை நொளம்பூர்- பெரம்பலூரில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், நொளம்பூரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

மக்களைத் தேடி அரசு எனும் சீரிய கோட்பாட்டின்படி, அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையில் 13.12.2013 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மதுரவாயல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், நொளம்பூரில், 2 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் 2017-2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில்
2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் , கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.