திருவண்ணாமலை

லாடவரத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. உறுதி

திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு வரவேற்றார். இம்முகாமை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

லாடவரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரக்கோரி கழக நிர்வாகிகள் பலமுறை என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று லாடவரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனை அமைய உள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கலசப்பாக்கத்தில் தான் அதிகப்படியான மினி மருத்துவமனை அமையவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. 7 பேருக்கு குழந்தைகள் நல பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் சரண்யா, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, அம்மா பேரவை துணை செயலாளர் ஜி.துரை, வழக்கறிஞர் செம்பியன், ஆட்டோ பாஸ்கர், கருணாமூர்த்தி, ஊராட்சி தலைவர் குமரவேல், மாவட்ட நிர்வாகி ரமேஷ், தகவல் தொழில் நுட்பபிரிவு நிர்வாகிகள் கபாலி, லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.