சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது – முதலமைச்சர் பேட்டி

நீலகிரி

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதோடு,
இம்மாவட்ட தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்கும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதன் விளைவாக அதற்குரிய பலன் கிடைத்துள்ளது. நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை மற்றும் பல துறைகள் ஒன்றாக இணைந்து இந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, நேற்றையதினம் வரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் 6,833 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 6,514 நபர்கள், இறந்தவர்கள் 40 நபர்கள். 5.11.2020 அன்று பாதிக்கப்பட்டவர்கள் 33 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 நபர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 282 நபர்கள். 5.11.2020 வரை இம்மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1,67,431 நபர்கள். 5.11.2020 அன்று மட்டும் இம்மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 2,453 நபர்கள். பரிசோதனை நிலையம் ஒன்று உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகளில் 255 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனைகள் 3 இடங்களில் 28 படுக்கை வசதிகளும், கோவிட் கேர் சென்டர்களுக்கான 13 இடங்களில் 1,249 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தயார் நிலையில் 3 அரசு மருத்துவமனையில் 240 படுக்கைகளும், தனியார் விடுதிக் கட்டடத்தில் 368 படுக்கைகளும் உள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. இந்நோய்த் தொற்றைத் தடுக்க, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின்படி, தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்மாவட்டத்தில் இதுவரை 64 இடங்களில் 6,363 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 4,28,368 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 11 நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்த நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதுடன், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உதகமண்டலம் அரசு தலைமை மருத்துவமனை, சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு கட்டட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு பகுதியில் ரூ.15.80 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தலைமை மருத்துவமனையும், பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இருந்தாலும்கூட, உயர்தர சிகிச்சை பெற இம்மாவட்ட மக்கள் கோயம்புத்தூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டு, அம்மாவின் அரசு, இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, நீலகிரியில் ரூபாய் 447.32 கோடி மதிப்பீட்டில் உயர்தர சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கப்படும் என்று அறிவித்து, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியில், ஆண்டுதோறும் 150 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டையும் நிறைவேற்றித் தந்த அரசு அம்மாவின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.