சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் ரூ.152 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி – முதலமைச்சர் தகவல்

நீலகிரி

விவசாயிகளின் ரு.152 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதலைமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தோய் தடுப்பு பணிகள் குறித்த கூட்டங்களுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தாயகம் திரும்பிய மக்களின் கோரிக்கையை ஏற்று முதன்முறையாக முதலமைச்சரின் பசுமைவீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 46 ஆண்டுகளுக்குப் பின் கூடலூர் ஜென்மம் பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு ரூ.15.70 கோடி மதிப்பீட்டில் 1,726 வீடுகள் மின் இணைப்பு உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக வன நிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக 1,663 தனி நபர்களுக்கும், 111 இனங்கள் சமுதாய உரிமைகளுக்கும் 468 ஹெக்டேர் பரப்பளவு வன நிலம் வழங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை மூலமாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 705 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 37,500 சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.152 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 500 பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் ரூபாய் 5 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் குளிர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்குகளை சீரமைப்பதற்காக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குன்னூர் நகராட்சியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடலூர் பகுதியில் ரூ.204 கோடி மதிப்பீட்டில்
66/11 கே.வி. துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், தேவர்சோலை, நடுவட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் ரூபாய் 15.69 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.