தற்போதைய செய்திகள்

புதுச்சேரி வக்பு வாரியத்தை கழக எம்எல்ஏக்கள் முற்றுகை – உடனடியாக உறுப்பினர்களை நியமிக்க கோரிக்கை

புதுச்சேரி

புதுச்சேரி வக்பு வாரியத்தில் உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்தி ஏனாம் வெங்கடாச்சலப்பிள்ளை வீதியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தை கழக எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கழக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வக்பு வாரியத்துக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

புதுச்சேரியில் வக்பு வாரியம் இல்லாததால் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட முத்தவல்லிகள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் முஸ்லிம் தர்கா சம்பந்தமான விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்படாமல் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் ஆயுட்காலம் முடிய 4, 5 மாதங்கள் தான் உள்ளன. அதற்குள் தாங்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு உடனடியாக வக்பு வாரியம் அமைக்க வேண்டும். இல்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் முஸ்லிம் சமுதாய மக்களை ஒன்று திரட்டி ஆளும் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை கழகம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

இந்த முற்றுகை போராட்டத்தில் கழக மாநில சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சேட்டு என்ற அபூபக்கர், பெரிய பள்ளி வார்டு கழக செயலாளர் வழக்கறிஞர் சையது அகமது மொய்தீன், நிஜாம், இஸ்மாயில், ரியாஸ், நாசர், இம்ரான், சுலைமான், ஆஷிக், சையத், சுகேன், சர்புதீன், பைசன், ரஷீப் மற்றும் ரக்கிங்ப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.