தற்போதைய செய்திகள்

16,960 பயனாளிகளுக்கு ரூ.121.35 கோடி கடனுதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில், கூட்டுறவுத் துறை சார்பாக நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.2.05 கோடி மதிப்பிலான புதிய அலுவலக கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்து, 16,960 பயனாளிகளுக்கு ரூ.121.35 கோடி மதிப்பிலான கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

விழாவில், கூட்டுறவுத்துறை சார்பில் 15,010 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.88.56 கோடியும், மகளிருக்கு மகளிர் சுய உதவிக் குழுக் கடனாக 404 பேருக்கு ரூ.18.56 கோடியும், சிறு வணிகக் கடனாக 287 பேருக்கு ரூ.87 லட்சமும், மத்திய காலக் கடனாக 304 பேருக்கு ரூ.1.87 கோடியும், மத்திய காலக் கடனாக (டிராக்டர்) 3 நபர்களுக்கு ரூ.15 லட்சமும், மாற்றுத்திறனாளி கடனாக 116 நபர்களுக்கு ரூ.47 லட்சமும், என மொத்தம் 16,960 பயனாளிகளுக்கு ரூ.121.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 31.3.2011 அன்று ரூ.26,245.17 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது அம்மா அவர்கள் ஆட்சியில், 30.09.2020 அன்று ரூ.59,453 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 2011 முதல் 30.09.2020 வரை அனைத்து வகைக் கடன்களாக 7,82,14,577 நபர்களுக்கு ரூ. 3,96,614 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 30.09.2020 வரை 7.29 லட்சம் ரூபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 31.10.2020 வரை 6,567 ரூபே பற்று அட்டைகள் மற்றும் 43,038 ரூபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5,835 சங்கங்கள் ரூ.190 கோடி மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழகம் முழுவதும் 772 சங்கங்கள் ரூ.95 கோடி மதிப்பிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 3 கிளைகள், 8 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள் ரூ.1.03 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில், ரூ.133 கோடி மதிப்பில் 525 புதிய அலுவலகக் கட்டடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கட்டிடம் ரூ.4 கோடி மதிப்பிலும், 62 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க கட்டடங்கள் ரூ.13 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ளன. மாநில அளவில், ரூ.17 கோடி மதிப்பில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 134 கிளைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவுத் துறையின் சார்பில் இயங்கி வரும் 292 அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும், 30.09.2020 வரை ரூ.1,040 கோடி அளவிற்கும், இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 அம்மா மருந்தகங்கள் மற்றும் 7 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.16 கோடி அளவிற்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படும் 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 02.11.2020 வரை 59,952 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள், ரூ.179 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும், இயங்கிவரும் நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 29.03.2020 முதல் 02.11.2020 வரை 7,358 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.22 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.